சென்னை: தர்மபுரி தொகுதியில் போட்டியிடும், பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு, 68.46 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இரண்டு ஆண்டுகளில், சொத்து மதிப்பு, 7.04 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தர்மபுரி தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர், வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் உள்ள விபரம்:
சவுமியாவிடம், 2.25 லட்சம்; கணவர் அன்புமணியிடம் 60,000; மகள் சஞ்சுத்ராவிடம் 20,000 ரூபாய் ரொக்கம் உள்ளது. சவுமியா பெயரில், 9.47 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹோண்டா சாஸ்; 53.59 லட்சம் மதிப்பிலான பென்ஸ் சொகுசு கார்கள் உள்ளன.
மேலும், அவரிடம் 2,927 கிராம் தங்க நகை; 1.64 கோடி மதிப்பிலான வைரம்; 26.44 கிலோ வெள்ளி உள்ளது. அவரது கணவரிடம், 960 கிராம் தங்கம்; மகள் சஞ்சுத்ராவிடம், 551 கிராம் தங்கம், 4.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம்; 2.50 கிலோ வெள்ளி உள்ளது. மொத்தம், சவுமியா அன்புமணியிடம் 19.61 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன.
அதேபோல, வேளாண்மை நிலம், வணிக கட்டடம் என, அசையா சொத்தாக, 48.85 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. அதில், அன்புமணிக்கு 6.85 லட்சம் ரூபாய் மட்டுமே அசையா சொத்து உள்ளது. மொத்தமாக, சவுமியா பெயரில், 68.46 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. மேலும், 8.99 கோடி ரூபாய் கடன், ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் சவுமியா போட்டியிட்டார். அப்போது, அவரது மொத்த சொத்து மதிப்பு 61.42 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
