பெங்களூரு: சென்னை கேப்டனாக தொடர்ந்து 7 தோல்வியை (2025-26) சந்தித்திருக்கிறார் ருதுராஜ். நேற்று முன் தினம் பெங்களூருவிடம் 43 ரன்னில் தோற்றது.
இது பற்றி ருதுராஜ் கூறுகையில்,”நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால், முடிவு மாறியிருக்கும். தோல்விக்கு பெறுப்பேற்கிறேன். 13-14வது ஓவர் வரை, போட்டி எங்களது கட்டுப்பாட்டில் இருந்தது. கம்போஜ் பந்தில் பெங்களூருவின் டிம் டேவிட் அவுட்டானார். அது ‘நோ-பால்’ என அறிவிக்கப்பட, சிக்கல் ஏற்பட்டது. டேவிட், 25 பந்தில் 70 ரன் விளாசி, போட்டியின் போக்கை மாற்றினார்,”என்றார்.
கேப்டனாக ருதுராஜ் வியூகம் எடுபடாததால், இந்த சீசனில் சென்னை தொடர்ந்து 3 போட்டியில் வீழ்ந்தது. இம்முறை 3 போட்டியில் 41 ரன் தான் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணியில் இருந்து ரூ.18 கோடிக்கு ‘இறக்குமதி’ செய்யப்பட்ட மற்றொரு துவக்க வீரரான சாம்சன் 3 போட்டியில் 22 ரன் எடுத்து தவிக்கிறார். சென்னை அணி அடுத்த போட்டியில் (ஏப். 11, சேப்பாக்கம்) டில்லி அணியை சந்திக்க உள்ளது. இதற்கு முன் கேப்டன் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை தோனி எடுக்க வேண்டும்.
இந்திய முன்னாள் கேப்டன் கும்ளே கூறுகையில்,”அனுபவ ருதுராஜ், சாம்சன் துவக்கத்தில் தடுமாறுவது சென்னை அணிக்கு கவலை அளிக்கும் விஷயம். இவர்களை தவிர மற்றவர்கள் இளம் வீரர்களாக உள்ளனர். முதல் 3 போட்டிகளில் தோற்ற நிலையில், விரைவில் மீள வேண்டும்,”என்றார்.
தடைக்கல் இல்லாத படிக்கல்
புதுடில்லி: பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல் அருமையான ‘பார்மில்’ உள்ளார். சென்னைக்கு எதிராக 29 பந்தில் 50 ரன் விளாசினார். பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் கூறுகையில்,”ஆடுகளம் ஒத்துழைக்காத போது, சிலர் பெரிய ‘ஷாட்’ அடித்து விக்கெட்டை பறிகொடுப்பர். ஆனால், படிக்கல் மன உறுதி கொண்டவர். ஆரம்பத்தில் பொறுமையாக இருப்பார். போகப் போக ‘டாப்-கியரில்’ செல்வார். தரமான கிரிக்கெட் ‘ஷாட்’ அடிப்பார். இவரது சிறப்பான ‘பேட்டிங்’ தொடர்ந்தால், இந்திய அணியில் இடம் பெறுவதை தடுப்பது கடினம். தடைகளை உடைத்து முன்னேறி செல்வார்,”என்றார்.
