சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், பிரதான பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்.2-ம் தேதியுடன் முடிந்த நிலையில், நேற்று மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 9 விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வு முடிவடைந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.10 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
