காந்திநகர்: 'கேரள மக்கள் படிப்பறிவு மிக்கவர்கள். அவர்கள் குஜராத் மற்றும் பிற மாநில மக்களை போன்றவர்கள் அல்ல'

காந்திநகர்: ‘கேரள மக்கள் படிப்பறிவு மிக்கவர்கள். அவர்கள் குஜராத் மற்றும் பிற மாநில மக்களை போன்றவர்கள் அல்ல’ என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘இவரது பேச்சு, குஜராத் மட்டுமின்றி பிற மாநில மக்களை அவமதிப்பதாக உள்ளது’ என, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரசாரம்

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘கேரள மக்கள் படிப்பறிவு மிக்கவர்கள்.

அவர்கள் குஜராத் அல்லது பிற மாநில மக்களை போல் அல்ல. அவர்களை திசை திருப்பவும் முடியாது; ஏமாற்றவும் முடியாது’ என்றார்.

அவமதிப்பு

இவரது பேச்சுக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., தேசிய இளைஞரணி துணைத் தலைவரும் குஜராத் துணை முதல்வருமான ஹர்ஷ் சங்வி கூறியதாவது:

நம் நாட்டிற்கு மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழங்கிய இந்த குஜராத் மண்ணையும், இங்கு வசிக்கும் 6 கோடி மக்களையும் கார்கே அவமதித்துள்ளார். குஜராத் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? உங்கள் கட்சியை விரட்டியது தான் இந்த விரக்திக்கு காரணமா?

இது, உங்களின் உண்மை தரத்தை காட்டுகிறது. குஜராத் மக்கள் எப்போதும் காங்.,கை நிராகரித்தே வந்துள்ளனர். எதிர்காலத்திலும் அவர்கள் தொடர்ந்து நிராகரிப்பர். குஜராத், இதை மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link