வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு செவ்வாய் இரவு 8 மணி வரை இறுதி கெடு விதித்து, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது: பிப்.,28 அன்று மோதல் தொடங்கியபோது, ஈரான் மிகவும் வலிமையாக இருந்தது. ஆனால் இப்போது அவர்களின் வலிமையை நாங்கள் முடக்கிவிட்டோம். அவர்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர். அவர்கள் மீதான இந்நடவடிக்கையை, 47 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எடுத்திருக்க வேண்டும்.
அங்குள்ள மக்களும், ஈரான் அரசிடமிருந்து சுதந்திரம் பெறவே விரும்புகிறார்கள். ‘எங்களைத் தொடர்ந்து தாக்கி, ஈரான் அரசிடமிருந்து எங்களை விடுதலை செய்யுங்கள்’ என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை வைப்பதாக தகவல்கள் வருகின்றன.
கடைசி கெடு
ஈரானுக்கு எதிரான போரில், இது ஒரு முக்கியமான காலகட்டம். ஈரான் தரப்பில் 7 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. நான் அவர்களுக்கு 10 நாட்கள் கொடுத்தேன். இன்று இரவு 8 மணி வரை (அமெரிக்க நேரப்படி, செவ்வாய் இரவு 8 மணி வரை) அவர்களுக்கு நேரம் இருக்கிறது. அதற்குள் அவர்கள் உடன்பாட்டுக்கு வர வேண்டும். இல்லையெனில், அதன் பிறகு ஈரானில் பாலங்கள் இருக்காது. மின் நிலையங்கள் இருக்காது. அவர்கள் கற்காலத்திற்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
