சென்னை: தமிழகத்தில் 95 நாட்களில், நாய்க்கடியால் 2.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 13 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுதும், 25 லட்சம் தெரு நாய்கள் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் ஓரளவு தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களுக்கு எவ்வித தடுப்பூசியும் போடாததால், நகரங்களை விட கிராமங்களில் நாய்க்கடி பாதிப்பு அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு, 6 லட்சத்து 25,700 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 34 பேர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்தனர். இந்த ஆண்டு துவங்கி, 95 நாட்களில், 2 லட்சத்து 9,081 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 13 பேர் ரேபிஸ் நோய் பாதித்து இறந்துள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 12,177 பேர்; திருச்சியில் 9,939; திருவள்ளூரில் 9,265; திண்டுக்கல்லில் 8,239; விழுப்புரத்தில் 8,213 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய், பூனை, குரங்கு கடித்த காயங்களை முறையாக கிருமி நாசினி வைத்து துாய்மைப்படுத்தாமல் இருந்தால், தொற்று ஏற்படக் கூடும். தடுப்பூசிகளை தவற விட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க முடியாது.
ஆழமான காயங்களுக்கு, தடுப்பூசியுடன் சேர்த்து, ஆர்.ஐ.ஜி., எனப்படும் ரேபிஸ் இம்யூனோ குளோபளின் தடுப்பு மருந்து செலுத்தலாம். முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள் மற்றும் 21வது நாள் என, நான்கு தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். இம்யூனோகுளோபளின் மருந்தானது, முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
