கோவை: ”இன்னொரு தேர்தலில் கட்சி என்னை வேட்பாளராக நிறுத்தினால் போட்டியிடுவேன்” என்று அண்ணாமலை கூறினார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உடன் சென்றார்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: தொண்டாமுத்துார் தொகுதி அ.தி.மு.க.., வேட்பாளர் வேலுமணி, தொகுதி முழுவதும் எல்லோருடைய அன்பை பெற்றவர், அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது இங்கு வந்துள்ள கூட்டமே ஒரு சாட்சி. அனைவரும் இவர் செய்த பணிகளால் பயன் பெற்றவர்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்கள். ஆனால், அதற்கு மேல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தேர்தலுக்கு பிறகு, பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, வேலுமணி உயர் பதவிக்கு வந்து , கோவை வளர்ச்சி பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். கோவையின் வளர்ச்சிக்கு வேலுமணி தான் உறுதி செய்ய முடியும். இத்தேர்தலில், அவிநாசி சேர்த்து, கோவை மாவட்டத்தில் 11 தொகுதியில் அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.
அ.தி.முக., ஆட்சிக்கு வந்த பிறகு, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம். இது தொடர்பாக பிரதமர் மோடியை, பழனிசாமி சந்தித்து பேசி விட்டார். இந்த முறை நான் வேட்பாளராக இல்லாத காரணத்தால் நேரம் கிடைக்கிறது. அதனால் தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் சென்று பிரசாரம் செய்வேன். இத்தேர்தலில் கட்சி என்னை பிரசாரம் செய்ய சொல்லி இருக்கிறது. இன்னொரு தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினால் போட்டியிடுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
