எஸ்.வாசுதேவன், தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்gmail.comதமிழகம், சிறு மற்றும்

எஸ்.வாசுதேவன், தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்

pr*********@***il.com

தமிழகம், சிறு மற்றும் குறுந்தொழில்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இவை, பெரு நிறுவனங்களுக்குப் பக்கபலமாக இருப்பதால் தான், இங்கு பெரு நிறுவனங்களே முதலீடு செய்ய வருகின்றன.

இந்த தொழில்களை நடத்துவோர், அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகளை கண்டு அச்சப்படுகின்றனர். காரணம், இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை ஈடுசெய்ய, மீண்டும் தங்கள் தலையில்தான் கை வைப்பரோ என்ற எண்ணம் ஓங்கி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தவை தான் அந்த எண்ணத்தை ஓங்கச் செய்திருக்கிறது.

கட்டணம், வரி

* கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சார நிலைக்கட்டணம் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோவாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த நிலைக்கட்டணம் தற்போது 165 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

* பகல் நேரத்திலும் ‘பீக் ஹவர்’ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகம் ஒரு மின்மிகை மாநிலம், அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் என்று பெருமை பேசிக்கொள்ளும் நிலையில், பகல் நேரத்திலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரும் முரண்பாடு

* சி று மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தாழ்வழுத்த மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன. இவர்களை சூரிய சக்தி பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். அப்போது, சோலார் பேனல்களை கட்டடத்தின் ஒரு பகுதியாக கருதாமல், இயந்திரங்களின் ஒரு பகுதியாக கருதி, மூலதன மானியம் பெற வழிவகை செய்ய வேண்டும்

* சொத்துவரி 300 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்பேட்டைகளில் சாலை வசதி, கழிவுநீர் வசதி போன்ற அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் ‘சிட்கோ’ நிர்வாகமே அதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு செய்து வருகிறது. ஆனால், எந்தவித அடிப்படை சேவையும் வழங்காத உள்ளாட்சி அமைப்புகளும், தங்கள் இஷ்டத்திற்கு வரியை உயர்த்தி விதிப்பது தொழில்முனைவோருக்கு இரட்டை சுமையை ஏற்படுத்துகிறது.

மானியம், நிவாரணம்

* டி.என்., -ட்ரெட்ஸ், டி.என்.,- – சி.ஜி.டி.எம்.எஸ்.இ., அண்ணல் அம்பேத்கர் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் போன்ற புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், இத்திட்டங்களுக்குத் தனி நிதி ஒதுக்கப்படாமல், ஏற்கனவே உள்ள நிதி ஆதாரத்தையே பயன்படுத்துவதால், முதலீட்டு மானியங்கள் ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இதனால், தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன

* எந்தவிதமான இடையூறும் இல்லாமல், 60 நாட்களுக்குள் மானிய தொகைகள் கிடைக்க, அரசு வழிவகை செய்ய வேண்டும். ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால், வங்கிகளுக்கு மானிய தொகைக்கான உத்தரவாதத்தை அரசே அளித்து, அதற்கான வட்டியையும் அரசே ஏற்க வேண்டும்

* கடந்த 2024ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால், பல தொழிற்சாலைகளுக்குள் நீர் புகுந்து பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. மாநில அமைச்சர்களும், அரசு பிரதிநிதிகளும் பார்வையிட்டுச் சென்றனரே தவிர, இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இனியாவது, பேரிடர்களால் பாதிக்கப்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி மற்றும் மானியத்துடன் கூடிய சிறப்பு காப்பீட்டுத் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும்.

ஒற்றைச்சாளரமா; இழுத்தடிப்பா?

தற்போதைய ஒற்றைச்சாளர அனுமதி முறை பெயரளவில் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் போன்ற தளங்கள் தனித்தனியாகவே செயல்படுகின்றன. இதனால் அனுமதி பெறுவதில் காலதாமதமும் செலவும் அதிகரிக்கின்றன. எனவே, ஏற்கனவே இருந்த 30 நாட்களுக்குள் அனுமதி வராவிட்டால், அனுமதி கொடுக்கப்பட்டதாக கருதும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

மேலும், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கென தனிப்பட்ட சிறப்பு வகைப்பாடு ஒன்றை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கான கட்டணங்களை நிலம் மற்றும் கட்டட மதிப்பின் அடிப்படையில் கணக்கிடாமல், இயந்திரங்களின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும்.

ஓட்டு வங்கி

இந்த கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு தொழில்முனைவோர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை.

இவை தவிர, மதுரை- – துாத்துக்குடி, சென்னை- – கன்னியாகுமரி, சென்னை – -பெங்களூரு போன்ற பெரும் தொழில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே முடங்கிக் கிடக்கின்றன. அவற்றுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

தேர்தல் நேரங்களில் பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டங்களை முன்னெடுக்கின்றன. ஆனால், சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்புகள் எந்த போராட்டத்திலும் ஈடுபடாமல், மிகவும் எளிய முறையில் அனைத்து பிரதான கட்சிகளிடமும் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தின. ஆனால், இரு பிரதான திராவிட கட்சிகளில், ஒரு கட்சி மட்டுமே மின் கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆளுங்கட்சியோ இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது தொழில்முனைவோரை மிகுந்த வருத்தமடையச் செய்துள்ளது.

தமிழகத்தில், கிட்டத்தட்ட 40 லட்சம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உள்ளன. இதில், உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மட்டும் 20 லட்சத்திற்கும் மேல் உள்ளன. இத்துறையை நம்பி 80 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அரசியல் கட்சிகள் இவர்களை வெறும் தொழில்முனைவோராக பார்க்காமல், ஒரு மாபெரும் ‘ஓட்டு வங்கியாக’ கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

Source link