துாத்துக்குடி: தீப்பெட்டி ஆலைகளுக்கு வரும் 12ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 2,000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் உள்ளனர். 90 சதவீதம் பேர், பெண்களே பணிபுரிகின்றனர்.
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, ஈரான் நாட்டில் இருந்து தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மூலப்பொருட்களை பதுக்கி வைத்துள்ள நிறுவனங்கள், போரை காரணம் காட்டி விலையை கடுமையாக உயர்த்தி உள்ளன.
குறிப்பாக, 1 கிலோ மெழுகு, 80 ரூபாய்க்கு சில மாதங்கள் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீப்பெட்டி பண்டல்கள் பேக்கிங் செய்ய தேவையான பாலித்தீன் பைகள் ரகம் வாரியாக, 1 கிலோ, 60 ரூபாய் முதல், 100 ரூபாய் வ ரை உயர்ந்துள்ளது.
இதனால், வரும் 12ம் தேதி முதல், 25ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளுக்கு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. தீப்பெட்டி ஆலைகள் தற்காலிகமாக மூடப்படும் நிலை ஏற்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
