Escalator ஓரத்தில் இருக்கும் பிரஷ் எதற்கு? – இது தெரியாமப் போச்சே?! – 15

வணிக வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள எஸ்கலேட்டர்களின் (நகரும் படிக்கட்டுகள்) ஓரங்களில் இருக்கும் பிரஷ்கள், பலரும் நினைப்பது போல் காலணிகளைச் சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டவை அல்ல; அவை மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

Skirt Deflectors

எஸ்கலேட்டரின் நகரும் படிக்கட்டுகளுக்கும், அதன் பக்கவாட்டில் உள்ள நிலையான தகட்டிற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருக்கும். நமது நீளமான ஆடைகளின் ஓரங்கள், ஷூ லேஸ்கள் அல்லது மென்மையான ரப்பர் காலணிகள் அந்த இடைவெளியில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

அப்படி நடந்தால் பெரும் விபத்து ஏற்படும். இந்தப் பிரஷ்கள் ஒரு எச்சரிக்கையாகச் செயல்படுகின்றன. நமது கால் தவறுதலாக ஓரத்திற்குச் சென்றால், பிரஷ் உரசும் உணர்வு ஏற்பட்டு, நாம் அனிச்சையாக காலை விலக்கிக் கொள்வோம்.

ஆரம்ப காலங்களில் எஸ்கலேட்டர்களில் இந்தப் பிரஷ்கள் கிடையாது. இதனால் உலகெங்கிலும் பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆடைகள், காலணிகள் அந்த ஓரங்களில் சிக்கி பல மோசமான விபத்துகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளின்படி இந்த `Skirt Deflectors’ பிரஷ்கள் எஸ்கலேட்டர்களில் கட்டாயமாக்கப்பட்டன.

Skirt Deflectors
Skirt Deflectors

மனிதர்களின் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி, எஸ்கலேட்டரின் இயந்திரப் பாதுகாப்பிற்கும் இவை உதவுகின்றன. நகரும் படிக்கட்டுகளின் உள்ளே இருக்கும் மோட்டார் மற்றும் சங்கிலி அமைப்புகளுக்குள் சிறு குப்பைகள், முடிகள், நாணயங்கள் மற்றும் தூசுகள் விழுவதைத் தடுக்கும் ஒரு தடையாகவும் இது செயல்படுகின்றன.

பலரும் அறியாமையால் இந்தப் பிரஷ்களில் தங்கள் ஷூக்களைத் தேய்த்து சுத்தம் செய்ய முயல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான செயலாகும். எஸ்கலேட்டரில் வரையப்பட்டுள்ள மஞ்சள் கோட்டிற்கு உள்ளே பாதுகாப்பாக நிற்பதே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழி.

Source link