தேசியவாத காங்., நிர்வாகி கொலை வழக்கு: 'மாஜி' முதல்வர் மகனுக்கு ஆயுள் தண்டனை

ராய்பூர்: தேசியவாத காங்கிரஸ் நிர்வாகி ராமவதார் ஜக்கி கொலை வழக்கில், சத்தீஸ்கரை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன், அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சத்தீஸ்கரில், தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ராமவதார் ஜக்கி. 2003, ஜூன் 4ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின்போது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது; முதல்வராக அஜித் ஜோகி இருந்தார்.

குற்றப்பத்திரிகை

ராமவதார் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டதை அடுத்து, அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி உட்பட 29 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2007, மார்ச் 31ல், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம், அமித் ஜோகியை மட்டும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தாமதமாக மேல்முறையீடு செய்ததால், இந்த வழக்கை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்தது. அரசு தரப்பிலும், இறந்த ராமவதார் ஜக்கியின் மகன் சதீஷ் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, இந்த வழக்கை ஏற்ற சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், விசாரணை முடிந்து கடந்த 2ம் தேதி தீர்ப்பளித்தது.

சரண்

அதில், அமித் ஜோகி குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்நிலையில், தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது:

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது. தவறானது மட்டுமின்றி நியாயமற்றதும் கூட. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள ஆதாரங்களுக்கு முரணாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளி

அமித் ஜோகி மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

கட்டத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே, அமித் ஜோகி போலீசாரிடம் உடனடியாக சரணடைய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள அமித் ஜோகி, 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ-.,வாக இருந்துள்ளார்.

Source link