ஆன்லைன் டெலிவரி நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து!

சென்னை தியாகராயர் நகர் பகுதியில் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (07.04.2026) காலை அங்குள்ள குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குடோனுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மளிகைப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது.  

அதோடு இந்த தீயானது குடோனின் பிற பகுதியிலும் பரவியது. இதன் காரணமாக ஜன்னல் வழியாக கரும்புகைகள் வெளியேறின. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மற்றொருபுறம் இந்த தீ விபத்தானது மின்கசிவு காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், குடோனில் இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும், அலுவலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Source link