திருநெல்வேலி: திருநெல்வேலியில் நாளை (ஏப்ரல் 08) விஜய் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நாளை (ஏப்.8) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மூத்த தலைவர் செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டார். விஜய், தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து வாகனத்தில் திருநெல்வேலி கேடிசி நகர் நோக்கி வருகிறார். கேடிசி நகர் காப்பர் லீப் ஹோட்டல் அருகே தனியார் இடத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: திருநெல்வேலியில் ஒரே இடத்தில் மட்டுமே விஜய் பேசுகிறார். அவர் ரோடு ஷோவாக திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள் வழியாகச் சென்று பின்னர் தூத்துக்குடி செல்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் 51 விதிமுறைகள் விதித்துள்ளனர்.
இதில் குடிநீர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மற்ற கட்சிகளை விட தவெக கூட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சென்னை தவிர பிற இடங்களில் விதிமுறைகளை பின்பற்ற சிரமம் இல்லை.
ஆனால் சென்னையில் மட்டுமே தடைகள் அதிகம் உள்ளன. மேலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீட் கிடைக்கும் என நம்பி பணியாற்றியவர்களுக்கு சீட் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. இதற்கு, “யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கே சீட் வழங்கப்படும் என்பது தலைவரின் முடிவு. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
