டி.என் 2026 படத்திற்குத் தடை? சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் டி.என் 2026. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்  தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தைக் கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படம் முழு நீள அரசியல்  படமாக உருவாகியுள்ளது. 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த டீசரில் நட்டியின் கதாபாத்திரம் தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிப்பது போன்று உள்ளது. அது மட்டுமல்லாமல், “சினிமாகார பயலே, இது தமிழ்நாடு, வாழ ஆசைப்படு தப்பில்ல, ஆனா ஆள நினைக்கிறியே அது தப்பில்ல’, ‘கூத்தாட வந்தவனையெல்லாம் தலை மேல தூக்கி வச்சி கொண்டாடுறீங்க’, ‘எம்.ஜி.ஆர் எல்லாம் எப்படி சிஎம் ஆனார்? எங்கள் தலைவரும் அதே மாஸுல தான இருக்காரு’ போன்ற அதிரடி வசனங்களும் இடம் பெற்றிருந்தன.  

இந்நிலையில், இந்த படத்தைத் தேர்தல் முடியும் வரை திரையிடத் தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யை இழிவு படுத்துவது போலவே உள்ள இந்த படத்தை, தேர்தலுக்கு முன்பு வெளியிட்டால் அது வாக்காளர்களிடையே ஒரு சார்பு நிலையை உருவாக்கித் தேர்தலில் சமமான போட்டி என்ற நிலையைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே, இந்த படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.   

இப்படம் தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஜனநாயகன் படத்தைத் திரையிட அனுமதிக்காத போது, இந்த படத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும், தேர்தல் நடைபெறும் நாள் (23-04-26) மிக நெருக்கமாக உள்ள சூழலில் ஒரு அரசியல் தலைவரைக் குறித்து விமர்சிக்கும் வகையிலான படத்தை எப்படி அனுமதிப்பீர்கள்? அப்படியானால் இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என்பது உண்மைதானே? என தவெக தொண்டர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.  

Source link