தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மதுரை தெற்கு தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஃபட்னாவிஸ் கூறுகையில், “ராம சீனிவாசன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடியை அணுகினால், மெட்ரோ திட்டம் மதுரையை சென்றடையும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பா.ஜ.க. எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?. அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்க (Double Digit) பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
