ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் அதை எதிர்கொள்ள ஈரான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மின் நிலையங்களை சுற்றி மனித சங்கிலியை அமைக்குமாறு இளைஞர்களுக்கு ஈரான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஈரானிய இளைஞர்கள் அனைவரும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பு மையங்களுக்கு அருகே கூடுமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று இளைஞர் விவகார அமைச்சக துணைச் செயலாளர் அலிரேசா ரஹிமி கூறியதாவது:-
மின் நிலையங்களை சுற்றி மனித சங்கிலியை அமைக்கலாம் என்று பல்கலைக்கழக மாணவர்கள், இளம் கலைஞர்கள், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த பலர் எங்களுக்குப் பரிந்துரைத்தனர். இந்த யோசனையை அந்த இளைஞர்கள்தான் தெரிவித்தனர்.
பிரகாசமான எதிர்காலத்திற்காக ஈரானிய இளைஞர்களின் மனிதச் சங்கிலி” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயக்கம், ஒற்றுமையையும் உறுதியையும் பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டது.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் பங்கேற்புடன் மின் நிலையங்களைச் சுற்றி இந்த மனிதச் சங்கிலி அமைக்கப்படும். இது நாட்டின் உள் கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும், ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் இளைஞர்களுக்குள்ள அர்ப்பணிப்பின் அடையாளமாகத் திகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே டிரம்ப் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்றும் தாக்குதலை தொடர்வோம் என்றும் ஈரான் தெரிவித்து உள்ளது.
