தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (08.04.2026) திருநெல்வேலி மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார்.
இதற்காகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் விஜய் அங்கிருந்து காரில் திருநெல்வேலிக்குச் செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பரப்புரை மற்றும் சாலைப் பேரணியில் விஜய் பங்கேற்க உள்ளார். அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் 51 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். குறிப்பாக, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாகனத்தில் இருந்தபடியே மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளைக் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் மேற்கொள்ளும் சூறாவளிப் பிரச்சாரம் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பரப்புரைகள் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது அடுத்தகட்ட பிரச்சாரத்திற்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
