‘ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதை மறந்து விடக்கூடாது’ – மம்தாவிற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

மேற்குவங்கத் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் மாற்றப்பட்ட அதிருப்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பு பாராட்டும் மம்தா பானர்ஜி, ‘இந்தியா’ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கருத்தை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மம்தாவின் இந்தப் பேச்சு பொறுப்பற்றது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“மம்தா பானர்ஜியின் சமீபத்திய கருத்து மிகவும் பொறுப்பற்றதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

பாஜகவிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த நேரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மட்டுமே பலவீனப்படுத்தும்.

எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைப்பது மம்தா தனது சமநிலையை இழந்து பேசுவதைப் போல தோன்றுகிறது. 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அல்ல, திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததும், 2004 தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதும் மறக்கக் கூடாது.

உண்மைகள் இல்லாமல் கூட்டணி கூட்டாளிகளை குறிவைத்து, அமைப்புகளின் மீது சந்தேகம் எழுப்புவது தலைமைத் தன்மையல்ல — அது கவனச் சிதறலாகும்.

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-பாஜக கொள்கைக்கு எதிராக நின்று போராடி வருகிறார். அவர்மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன; அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அரசு வீடும் காலி செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்த்து நிற்பதற்கு அவர் செலுத்திய விலை இது.

பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு யாரிடமும் பாடம் தேவையில்லை.

இது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுக்கான நேரமல்ல. இது ஒற்றுமை, பொறுப்பு, மற்றும் நோக்கத்தில் தெளிவு கொண்டிருக்க வேண்டிய நேரம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link