“இது ஒரு தொடக்கம் தான்”; நீளிரா படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் உருக்கமான பதிவு

சோமிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. கார்த்திக் சுப்புராஜியின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் மற்றும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ இணைந்து தயாரித்துள்ள, இப்படம் ஏப்ரல் 3 அன்று வெளியானது. வெளியான நாள் முதல் இருந்து மக்களிடத்தில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைபிரபலங்கள் பலரும் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.  

முன்னதாக, திரைப்பட விமர்சகர்களும் இந்த படத்தைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், நேர்மறையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். இதனிடையே, நடிகர் சூர்யாவும் இந்த படத்தினை பாராட்டி நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இவ்வாறு, நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வணிக ரீதியாக இப்படம் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.  

இந்நிலையில், இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் அன்பான தமிழ் ரசிகர்களே, நீளிரா படம் ஏப்ரல் 3 அன்று வெளியானது. அன்று முதல் இப்படத்திற்கு ரசிகர்கள் அபார வரவேற்பை அளித்துள்ளீர்கள். சோமிதரன் என்கிற ஈழத்துத் தமிழரின் படம் என்பதால், இதனைத் திரையில் வெளியிட பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். 

கோடிக் கணக்கில் லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தைத் தயாரிக்கவில்லை. ஈழத்துப் போரைச் சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்கில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த படம். இது ஒரு தொடக்கம் தான். இந்த தொடக்கம் வளர்ந்து, இனி வரும் காலங்களில் இது போன்ற படைப்பாளிகளும் சினிமாவிற்குள் வரவேண்டும் என்றால் வணீக ரீதியாகத் திரையரங்குகளுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அனைவராலும் பாராட்டப்படும் வகையில் படைக்கப்பட்ட ஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தால், அது மேலும் இது போன்ற படைப்புகள் வருவதற்கு உந்துதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link