CSK : `இனி ஆட்டம் மாறும்!' – தயார் நிலையில் தோனி & `பேபி ஏபிடி' பிரெவிஸ்?

ஐபிஎல் 2026 தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் இருவரும் காயத்திலிருந்து மீண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரும்ப வருகிறார் தோனி?

ஐந்து முறை சிஎஸ்கே-வுக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் தோனி, தசைப்பிடிப்பு காரணமாக இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை.

தோனி

அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானாலும், அணி நிர்வாகம் அவரது வருகையை அவசரப்படுத்த விரும்பவில்லை. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தோனிக்கு அடுத்த ஓரிரு நாட்களில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் அவர் தேர்ச்சி பெற்றால், சனிக்கிழமை டெல்லிக்கு எதிராக நடக்கும் போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “அவர் சரியான பாதையில் தான் இருக்கிறார். மெதுவாகக் குணமடைந்து வருகிறார். விளையாடுவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார். சில சமயங்களில் காயம் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால், அவர் விரைவில் அணிக்குத் திரும்புவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ப்ரேவிஸ் வருகையும் உறுதி!

தென்னாப்பிரிக்காவின் ‘பேபி ஏபிடி’ என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரேவிஸ், விலாப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு அவர் அணியுடன் பயணம் செய்திருந்தாலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், ப்ரேவிஸின் வருகை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Dewald Brevis - டெவால்ட் பிரெவிஸ்
Dewald Brevis – டெவால்ட் பிரெவிஸ்

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் இதுபற்றி கூறுகையில், “அடுத்த போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என நம்புகிறோம். அடுத்த போட்டிக்கு ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது. நாங்கள் அவரது விஷயத்தில் சற்று நிதானமாகவே இருக்கிறோம். இந்த ஐந்து நாட்கள் திட்டமிட்டபடி சென்றால், அவர் விளையாடத் தயாராகிவிடுவார். அவர் இல்லாதது அணிக்குப் பெரிய இழப்பு. அவர் திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்றார்.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் சிஎஸ்கே அணிக்கு, அனுபவமிக்க ஃபினிஷரான தோனியின் வருகையும், அதிரடி வீரரான ப்ரேவிஸின் வருகையும் மிகப் பெரிய பலத்தைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இருவரின் வருகை, அணியின் வெற்றிப் பாதைக்குத் திருப்புமுனையாக அமையுமா என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Source link