புதுடில்லி:சட்ட விரோத மது விற்பனைக்காக, ஆன்லைன் டெலிவரி செயலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சட்ட விரோத மது விற்பனைக்காக, ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் பயன்படுத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவுட்டர் டில்லி மாவட்டத்தில் உள்ள பீராகார்கி சவுக் என்ற பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.
அந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் சிலர், சட்ட விரோதமாக இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிய வந்தது. அதன்படி, பஹதுார்கார் என்ற இடத்தை சேர்ந்த புஷ்பேந்தர், 22, என்ற ஆன்லைன் டெலிவரி ஏஜன்ட், போலீஸ் விசாரணையில் சிக்கினார்.
அவரிடம் விசாரித்த போது, சமீர் பாலிவால், 19, என்ற நபர், இந்த மோசடிக்கு மூளையாக செயல்படுவது தெரிய வந்தது. அவரை தேடி, போலீசார் சென்ற போது, அவரை காணவில்லை.
இந்த நபர், சட்டப்படியான மது விற்பனை நபர்களிடம் இருந்து மதுவை வாங்கி, அவற்றை அதிக விலைக்கு, சட்ட விரோதமாக சிலருக்கு அனுப்பி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
டில்லியின் பிரேம்நகர் பகுதியை சேர்ந்த அந்த சமீர் பாலிவால் சிக்கினால் மட்டுமே, இந்த முறைகேடு அம்பலமாகும் என தெரிவித்துள்ள போலீசார், தொடர்ந்து, அந்த பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.
