தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிநீக்க தீர்மானம்; இரு அவைகளிலும் நிராகரிப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த தீர்மானம் இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்டது. வாக்கு திருட்டு மற்றும் சிறப்புத் தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் ஞானேஷ் குமார் மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினர். இந்த தீர்மானத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 130 மக்களவை உறுப்பினர்களும், 63 மாநிலங்களவை உறுப்பினர்களும்  கையெழுத்திட்டிருந்தனர்.

எதிர்க்கட்சியினர் இந்த தீர்மானத்தைக் கடந்த மாதம் (மார்ச்)13  ஆம் நாள் இரு அவைகளிலும் சமர்ப்பித்தனர். விதிகளின்படி தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் குறைந்தது மக்களவையில்100 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களின் கையெழுத்தும் தேவையாகும். இந்நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை பாஜக அரசுக்கு சாதகமாக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.

இதன் காரணமாக,  193 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தீர்மானத்தைச் சமர்ப்பித்தனர். இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மீ கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டிருந்தனர். வரலாற்றிலேயே தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் முன் மொழியப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த தீர்மானத்தில் பதவியில் பாரபட்சமான நடவடிக்கை, தேர்தல் மோசடி விசாரணையை வேண்டுமென்றே தடுத்தல் மற்றும் வாக்குரிமை பறிப்பு உள்ளிட்ட புகார்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த தீர்மானம் எந்த காரணமும் குறிப்பிடப்படாமல் இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Source link