ராமநாதபுரம்: ராமநாதபுரம், முதுகுளத்துார், திருவாடானை எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்துார் சட்டசபை தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வேட்பு மனுவில் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளனர். கடந்த தேர்தலில் தாக்கல் செய்த சொத்து விபரங்ளை ஒப்பிடும் போது தற்போது இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதன் விபரம்:
காதர்பாட்சா:
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் காதர்பாட்சாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.64 கோடி என வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. 2021 தேர்தலின் போது அசையும் சொத்து ரூ.49 லட்சத்து 88 ஆயிரத்து 85, மற்றும் அசையா சொத்து 44 லட்சத்து 94 ஆயிரத்து 642 என ரூ.94 லட்சத்து 82 ஆயிரத்து 727 இருந்ததாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.தற்போதைய வேட்பு மனுவில் வேட்பாளர் மற்றும் மனைவியிடம் தலா ரூ.20,000 ரொக்கம், வங்கியில் ரூ.41 லட்சத்து 38 ஆயிரத்து 899 உள்ளது. வேட்பாளரிடம் 40 கிராம் மற்றும் மனைவியிடம் 800 கிராம் தங்க நகைகள் உள்ளன. அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரத்து 499, அசையா சொத்து மதிப்பு ரூ.80 லட்சத்து 52 ஆயிரத்து 143 என ரூ.2 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரத்து 642 உள்ளது.
ராஜகண்ணப்பன்
முதுகுளத்துார் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி உள்ளது என வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. 2021 தேர்தலின் போது அசையும் சொத்து ரூ.82 லட்சத்து 53 ஆயிரத்த 994 மற்றும் அசையா செத்து ரூ.29 லட்சத்து 37ஆயிரத்து 500 என ரூ.1 கோடியே 11 லட்சத்து 91 ஆயிரத்து 494 உள்ளதாக கூறப்பட்டிருந்தது. தற்போதைய வேட்பு மனுவில் கையில் ரொக்கம் ரூ.1 லட்சம், வங்கியில் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 739 உள்ளது. அவர் மனைவியின் பெயரில் 3166 கிராம் தங்கம், 4125 கிராம் வெள்ளி, 152 காரட் வைர நகைகள் உள்ளன. அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 68 லட்சத்து 3640 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.88 லட்சத்து 5740 என ரூ.2 கோடியே 56 லட்சத்து 9380 உள்ளது.
கருமாணிக்கம்
திருவாடானை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் கருமாணிக்கம் சொத்து மதிப்பு ரூ.5.72 கோடி என வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. 2021 தேர்தலின் போது அசையும் சொத்து ரூ.97 லட்சத்து 65 ஆயிரத்து 586, அசையா சொத்து ரூ.2 கோடியே 13 லட்சத்து 65 ஆயிரம் என ரூ.3 கோடியே 11 லட்சத்து 30 ஆயிரத்து 586 உள்ளதாக கூறப்பட்டிருந்தது. தற்போதைய வேட்புமனுவில் கையில் ரொக்கம் ரூ.49 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் வங்கியில் 13 லட்சத்து 46 ஆயிரத்து 722 உள்ளது. 2023 ல் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கார் வாங்கியுள்ளார். வேட்பாளரிடம் 396 கிராம் தங்கம், மனைவியிடம் 1250 கிராம் தங்கம், இரண்டரை கிலோ வெள்ளி உள்ளது. அசையும் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரத்து 160 மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சத்து 55ஆயிரம் என ரூ.5 கோடியே 72 லட்சத்து 160 உள்ளது.
