புதுடில்லி:டில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார், அரசு உதவி பெறாத பள்ளிகளில் காலியாக உள்ள, 55 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள், குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று முதல், மாணவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு நடந்து வருகிறது.
டில்லி தனியார் பள்ளிகளில், 55,701 இடங்கள் காலியாக உள்ளன. முந்தைய ஆண்டில், 48,092 ஆயிரம் இடங்களே இருந்த நிலையில், 5,185 இடங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் மாணவர்களை நிரப்புவதற்கான, கம்ப்யூட்டர் உதவியுடனான குலுக்கல் நேற்று முன்தினம் இரவில், மாநில கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் தலைமையில், பழைய தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இதில், ஏராளமான மாணவர்களின் பெற்றோர் மற்றும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 48,092 இடங்களுக்கு குலுக்கல் நடந்தது.
அதன் பின், டிஸ்அட்வான்டேஜிடு குரூப் மற்றும் சிறப்பு தகுதிகளுடைய குழந்தைகளுக்கான குலுக்கல் நடந்தது. இதில், சிறப்பு தகுதியுடைய குழந்தைகளுக்கான 7,609 இடங்களுக்கு குலுக்கல் நடந்தது.
இந்த குலுக்கலுக்கு தலைமை வகித்த மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறும் போது, ”முந்தைய ஆண்டு போலவே இந்த ஆண்டும் குலுக்கல் அமைதியான முறையிலும், மறைமுகமின்றியும் நடந்தது. ஆதார் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கான குலுக்கலில், இந்த ஆண்டு, 2308 பள்ளிகள் பங்கேற்றன,” என்றார்.
இன்று முதல், மாணவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கிறது. அதன் பின், மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதில், குலுக்கல் இன்றி, மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
