சென்னை: தி.மு.க.,வினர் வாக்கு வங்கி அரசியல் தான் செய்கின்றனர் என த.மா.கா., தலைவர் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து வாசன் கூறியதாவது:தென்னிந்தியாவிலேயே தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் விதமாக, தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு மிக மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள், பாலியல் தொந்தரவுகளை தி.மு.க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மகளிர் தான் அடித்தளம்.
கோவிலுக்குப் போகாதவர்களுக்கும், கோவிலைப் பற்றி கவலைப்படாத அரசுக்கும், நெற்றியிலே பொட்டு வைப்பதே தவறு என நினைப்பவர்களுக்கும் வாக்களிக்காதீர்கள். அனைத்து மதமும் சமம் என கருதுவோருக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான், மகளிருக்கு அதிக திட்டங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், தி.மு.க.,வினர் வாக்கு வங்கி அரசியல் தான் செய்கின்றனர். மத்திய அரசை எதிரி கட்சியாக பார்ப்பதால் தான் தமிழகம் வளர முடியவில்லை.இவ்வாறு வாசன் கூறினார்.
