புதுச்சேரி: கவர்னரை வைத்து புதுச்சேரியை ஆள மத்திய அரசு நினைக்கிறது. என தமிழக துணை முதல்வர் உதயநிதி

புதுச்சேரி: கவர்னரை வைத்து புதுச்சேரியை ஆள மத்திய அரசு நினைக்கிறது. என தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரி மக்கள் எப்போதும் வெறுப்பு அரசியலுக்கு இடமளிக்க மாட்டார்கள். இது அன்பான மண். பா.ஜ.,வின் மக்கள் விரோத திட்டங்களை சோதிக்கும் இடமாக புதுச்சேரியை மாற்றி விட்டனர். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி அதன் மூலம் குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்திவிட்டனர். இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து விட்டனர். புதுச்சேரி சுய மரியாதை உள்ள மண் என்பதை இம்முறை நாம் நிரூபிக்க வேண்டும்.

மாநில அரசும், மத்திய அரசும் ஒரே அணியில் இருந்தால் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என மோடி சொல்கிறார். டபுள் என்ஜின் சர்க்காரால் புதுச்சேரியில் ஏதாவது வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? உரிமைகள் கிடைத்துள்ளதா? தமிழகத்தில் எப்படி அ.தி.மு.க., மீது பா.ஜ., சவாரி செய்கிறதோ. அதே போல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்., மீது ஏறி சவாரி செய்கிறது.

உண்மையில் பதுச்சேரி மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்தை கொடுத்திருக்க வேண்டும். மோடியால் செய்ய முடியாது என்று எதுவும் கிடையாது. அவருக்கு செய்ய மனமில்லை. புதுச்சேரியை தங்கள் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள பா.ஜ., நினைக்கிறது. கவர்னரை வைத்து புதுச்சேரியை ஆள மத்திய அரசு நினைக்கிறது. சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்து பார்த்திருப்போம். ஆனால் தமிழகத்தில் தான் சட்டசபையில் இருந்து கவர்னர் வெளிநடப்பு செய்து விட்டு சென்றார்.

புதுச்சேரி பல்கலையில் மாநில மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டுள்ளோம். ஆனால் அதையும் தர மத்திய அரசு மறுக்கிறது. புதுச்சேரியை டில்லியில் இருந்து ஆளவேண்டும் என பா.ஜ.,வினர் முடிவு செய்து விட்டனர். இந்த நிலையை மாற்ற நீங்கள் இண்டி கூட்டணியை ஆதரிக்க வேண்டும். உங்கள் கோரிக்கைகளை வேட்பாளர்கள் எம்.எல்.ஏ.,வாகி நிறைவேற்றுவார்கள்.

என்ஆர்.காங்., – பா.ஜ., அரசால் மூடப்பட்ட அரசு நிறுவனங்கள் திறந்து நவீன மயமாக்கப்படும். புதுச்சேரியிலும் பெண்களுக்கு விடியல் பயண திட்டம் செயல்படுத்தப்படும். வரும் தேர்தலில் தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் தே.ஜ., கூட்டணியை விரட்டி அடிப்போம். இந்த தேர்தல் பா.ஜ.,விற்கு முடிவு கட்டும் தேர்தல். புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளிலும் நமது கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஓட்டு அளியுங்கள்’ என்றார்.

Source link