சென்னை கவின்கலைக் கல்லூரியில் துகிலியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் படாம் என்ற டெக்ஸ்டைல் கண்காட்சி கடந்த ஒருவாரமாக ஏப்ரல் 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்றது. இதில் பல்துறை கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் ஆர்வத்தோடு கண்காட்சியை கண்டு களித்தனர். அடிக்கடி ஓவியங்கள், புகைப்படங்கள் சார்ந்த கண்காட்சியைப் பார்த்திருப்போம். ஆனால் துணிகளை மட்டும் மையப்படுத்திய கண்காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இறுதிநாளன்று படையெடுத்த மாணவர் கூட்டத்தோடு கண்காட்சியைப் பார்வையிடத்தொடங்கினோம்.
உலகின் முக்கியமான ஓவியர்களின் ஓவியங்களை துணியில் கலைநயமாக்கியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாரம்பரிய பொருள்களைக்கொண்டு சாயங்களை உருவாக்கி அதன்மூலமும் நிறைய கலைபடைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு மாணவர் தன் அம்மாவின் உருவத்தையே துணியில் உருவாக்கி வைத்திருந்தது வியப்பாக இருந்தது. உருவங்கள் மட்டுமல்லாமல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களையும் கலைநயமாக்கி வைத்திருக்கிறார்கள் இந்த மாணவர்கள். 20 மாணவர்கள் பங்கேற்ற இந்தக் காண்காட்சியை அத்துறையின் பேராசிரியர் சிபிச் சக்கரவர்த்தி வழிநடத்தியிருக்கிறார். அவரிடம் இந்தக் கண்காட்சி அனுபவங்கள் குறித்து பேசும் போது,

“ நான் சென்னை அரசு கவின்கலை கல்லூரியில் துகிலியல் துறையில் 2011ல இருந்து பேராசிரியராக இருக்கிறேன். எங்க துறை இறுதியாண்டு மாணவர்களோட கண்காட்சி இது. இந்தக்கண்காட்சியோட பேரு படாம். இது சங்க இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்ட சொல். யானைக்கு மேல் போடக்கூடிய துணி பேர் படாம்ன்னு சொல்லுவாங்க. மழைக்கு குளிர்க்கு போத்துற துணி பேரும் படாம் தான். அதைப்போல நாடகத்துக்கு கட்டக்கூடிய துணி பேரையும் படாம்ன்னு தான் சொல்லுவாங்க. வரையப்பட்ட அல்லது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட துணியை குறிக்கிறது தான் படாம். காலப்போக்குல இந்தச் சொல்லு தான் படமாக மருவி உருவாகியிருக்கு. படாம்ங்கிற சொல் சங்க இலக்கியத்துல அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ன்னு பல்வேறு பொருளைக் குறிக்கிறது.
இந்த டெக்ஸ்டைலையும் அப்படி பாருங்கன்னு சொல்றதுக்காகத்தான் இந்தத் தலைப்பை வச்சிருக்கோம். நம்ம இதுவரைக்கும் பூ, இலை, காய், கனி, மிக்கி மவுஸ் இந்த மாதிரி வடிவங்களைத்தான் துணிகளில் பாத்திருப்போம். இங்க தொங்கிட்டு இருக்கிறது வெறும் துணி மட்டும் கிடையாது. அதை உன்னிப்பா பாத்தீங்கன்னா அதுல பிகாசோ, லியார்னோ டாவின்ஸி, மைக்கேல் ஏஞ்சலோன்னு பல்வேறு கலைஞர்களோட ஓவியங்களை கலை வடிவமாக மாத்தியிருக்கிறோம்.

இது ரொம்ப ரிஸ்க்தான் ஏன்னா பெயிண்டிங்ஸ்ல ஆயிரக்கணக்கான கலர்ஸ் இருக்கும். ஆனா நாங்க மூணு கலர்ல அந்த பெயிண்டிங்ஸை கொண்டு வந்திருக்கிறோம். எங்க மாணவர்கள் உலகத்துல இருக்கிற குகை ஓவியங்களை உள்வாங்கிகிட்டு அதை மையமாக வச்சு பண்ணிருக்காங்க. இந்திய பாரம்பரிய கைத்தையல்கள் பண்ணிருக்கோம். 20 மாணவர்களும் 20 மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து அந்த மாநிலங்களில் இருக்கக்கூடிய பாரம்பரிய கைத் தையல்களை வைத்து உருவாக்கியிருக்கோம். மாணவர்கள் கிட்ட எப்பயும் எதாவது புதுசா உருவாக்கணுங்கிற தேடல் இருந்துக்கிட்டேதான் இருக்கும். தாமரையோ ரோஜாவையோ கொண்டு வரணும் இல்ல எருக்கம்பூவைக்கூட கொண்டு வரலாம். எங்களோட கல்லூரிச் சூழலே புதுசா கலையை உருவாக்கிட்டே இருக்கிற சூழல் தான். அதுனால நம்மை அவங்களை அரசியல்படுத்துற மாதிரியோ, கலைவயப்படுத்துற மாதிரியோ வழிநடத்துனா போதும்ன்னு நினைக்கிறேன். அதைப்புரிஞ்சி மாணவர்கள் செய்ற ஒவ்வொன்னும் பிரமாண்டமா இருக்கும். அதுதான் இங்க நடக்குது.

இது முழுக்க எங்க மாணவர்களோட ஒன்றரை வருட உழைப்பு. ஒரு ஆடையை நாம உடனே உருவாக்கிவிட முடியாது. அதுக்கு நிறைய மெனக்கெடல் இருக்கும். அதுசார்ந்து படிச்சு, டிராவல் பண்ணி சரியான திட்டமிடலோட பண்ணணும். இங்க டிசைன்கிறதே ஒரு திட்டமிடல் தான். இங்க கண்காட்சியை பார்க்க வருபவர்கள் இதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய உழைப்பு இருக்குங்கிறதை புரிஞ்சிப்பாங்கன்னு நினைக்கிறோம். இது வெறும் கண்காட்சிங்கிறதோட மாணவர்களை அடுத்த நிலைக்கு சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்துவதும்தான். நிறைய பேர் இங்க இருக்க பொருட்களை வாங்குறதுக்கு முன்வந்திருக்காங்க. மாணவர்களுக்கும் அது ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னோட 20 வருட கலைப்பயணத்துல நான் இதுவரை கண்டடைஞ்ச கலை அறிஞர்களை 7 நாட்களில் மாணவர்களுக்கும் கண்டடைஞ்சிட்டாங்கங்கிறது ரொம்ப நிறைவா இருக்கு. என மனம் நிறைகிறார் பேராசிரியர் சிபி சக்கரவர்த்தி.

இந்தக்கண்காட்சியில் பங்கேற்ற மாணவி பவானி நம்மிடம் பேசும்போது,
“ இந்த நவீனக் காலச் சூழல்ல ஆடைகள்ல கெமிக்கல் தான் பயன்படுத்துறாங்க. அதுக்கு மாற்றாக இயற்கை பொருட்களைக் கொண்டு கலம்காரி முறையில செஞ்சிருக்கேன். சூடி தந்த சுடர்கொடியேங்கிற கான்செப்டை மையப்படுத்தி ஒண்ணு பண்ணிருக்கேன். கலம்காரி முறையிலும் நிறைய பண்ணிருக்கேன். மறைந்த போன பழைய ஓவியர்களை நினைவு கூறும் வகையில் அவங்களோட ஓவியங்களை மையப்படுத்தி வரைஞ்சிருக்கோம். பாரம்பரியத்துல இருந்து இயற்கை முறையில் பண்ணிருக்கோம். மனிதர்களோட அடிப்படைத் தேவைகள்ல ஒண்ணு ஆடை. அதை மனிதனுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயற்கை முறையில் சிறப்பா கொடுக்கணுங்கிறது என்னோட ஆசை. நிறைய பேர் எங்களோட படைப்புகளை பாத்துப்பேசுறது ரொம்ப சந்தோசமா இருக்கு.”

மாணவி ஆர்த்தி தன் அனுபவத்தைப் பகிரும்போது,
“ என்பேரு ஆர்த்தி. எனக்கு சொந்த ஊரு திருச்சி. டெக்ஸ்டைலை ஒரு துணியாக மட்டும் பார்க்காம கலைவடிவமாக பாக்கணுங்கிறதுக்காக தான் இந்த கண்காட்சியே நடத்துறோம். நிறைய பேருக்கு பிடிச்சிருக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது மூலமா நாங்களும் நிறைய கத்துக்கிட்டோம். இந்தக் கண்காட்சிக்கு தான் அடுத்து நாங்க என்னவா மாறப்போறோம்ங்கிற திருப்பு முனையை கொடுத்திருக்கு. நிறைய புது மனிதர்களைப் பார்த்தது ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. இந்தத் துறையைப் பத்தி கண்காட்சியைப் பத்தி இன்னும் நிறைய பேருக்கு தெரியனும்” என்கிறார்.

இந்த கண்காட்சியை பார்வையிட்ட கல்லூரி மாணவி அனு ஶ்ரீ நம்மிடம் பேசும் போது,
“இந்த கண்காட்சி மூலமாகத்தான் இவ்ளோ விசயங்கள் இருக்குதுன்னே தெரியுது. இதுக்கு முன்னாடி நாங்க இப்படி ஒரு கண்காட்சியை பார்த்ததே இல்லை. எனக்கு டெக்ஸ்டைல் சார்ந்த விசயங்கள் ரொம்ப பிடிக்கும் அந்த ஆர்வத்துனால வந்து பார்த்தேன். ஒரு துணில இவ்ளோ நுணுக்கங்களோட வரையிறது ரொம்ப கஷ்டம். இதுக்கான மதிப்பு ரொம்ப அதிகம். எல்லாமே பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு.” என்பவரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
