வாஷிங்டன்:வெனிசுலாவில் அதிபராக போட்டியிட்டால் எவரும் பெறாத அளவுக்கு ஓட்டுகள் பெறுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டலுடன் கூறியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் கடந்த ஜன.,ல் கைது செய்தது.
இதையடுத்து வெனிசுலா தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி ‘ஆக்டிங் பிரசிடெண்ட் ஆப் வெனிசுலா’ என்று டிரம்ப் தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டார்.
மேலும் அமெரிக்காவின் 51வது மாகாணமாக வெனிசுலாவை இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். ஈரான் போரால், இந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருந்த நிலையில், வெனிசுலா பக்கம் டிரம்பின் கவனம் மீண்டும் திரும்பியுள்ளது.
அமெரிக்க விமானப்படை அதிகாரி ஈரானில் மீட்கப்பட்டது குறித்து நேற்று முன்தினம் வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, சம்மந்தம் இல்லாமல், வெனிசுலா குறித்து பேசிய அவர், அங்கு அதிபராக நான் போட்டியிட்டால், எவரும் பெறாத அளவுக்கு அதிக ஓட்டுகள் பெறுவேன் என்று அந்த நாட்டின் மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு அங்கு எனக்கு செல்வாக்கு உள்ளது, என்றார்.
மேலும், “இங்கு பதவிக்காலம் முடிந்ததும் வெனிசுலாவுக்கு சென்று ஸ்பானிஷ் மொழியை கற்றுக்கொள்வேன். நான் மொழிகளில் சிறந்தவன் என்பதால் அதிக நேரம் எடுக்காது. அதன்பிறகு வெனிசுலா அதிபராகக் கூட போட்டியிடுவேன்,” என்று கிண்டலுடன் கூறினார்.
