சண்டிகர்: பஞ்சாபில், காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நவ்ஜோத் கவுர் சித்து, 62, ‘பாரதிய ராஷ்டிரவாதி’ என்ற புதுக்கட்சியை துவக்கினார்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக காங்., உள்ளது.
இக்கட்சியைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, மாநில காங்., தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சி தலைமை மீதான அதிருப்தியில், கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து; கடந்த ஆண்டு டிசம்பரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முதல்வர் பதவியில் அமர, 500 கோடி ரூபாய் கேட்கின்றனர்’ என, குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, காங்கிரசில் இருந்து அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
அதிருப்தி அடைந்த அவர், பஞ்சாப் காங்., தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை தொடர்ச்சியாக விமர்சித்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரியில், காங்கிரசில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நவ்ஜோத் கவுர் வெளியிட்ட பதிவு:
தேசிய அளவில் ஒரு புதிய மாற்றத்திற்காக பணியாற்றி வருகிறோம். நாட்டுக்காக எங்களை அர்ப்பணிக்கவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் விரும்புகிறோம். தேசம் மற்றும் பஞ்சாப் மக்களின் வளர்ச்சிக்காக, ‘பாரதிய ராஷ்டிரவாதி’ என்ற கட்சியை துவக்குகிறோம்.
பஞ்சாபை அதன் இழந்த பழைய பெருமைக்கு எடுத்துச் செல்வதே என் நோக்கம். அன்பு, நீதி மற்றும் தன்னலமற்ற சேவையின் மூலம், மாநிலத்தை தங்க மாநிலமாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
