நடிகர் பிரஷாந்த் பிறந்தநாள் விழா மற்றும் அவரின் அடுத்த படமான ‘ரஞ்ஜன்’ பட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் மூலம் தேவயானி மகள், ப்ரியங்கா ராஜகுமாரன் நடிகையாகவும் தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரி நடிகராகவும் அறிமுகமாகிறார்கள். இப்படம் தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படத்தின் ரீமேக் ஆகும். தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ப்ரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த நிகழ்வில் பிரஷாந்த் பேசுகையில், “ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.
எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி. ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர்.
இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு இயக்குநராகவும், நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
