அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவருடன் பல ஈரான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்த போர் ஒரு மாதங்களைக் கடந்தும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த போர் பதற்றம் காரணமாக, ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால், உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகள் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, உலக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், ட்ரம்பின் எச்சரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்த நீரிணை பாதையைத் திறப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காலக்கெடு விதித்து, இந்த நீரிணையைத் திறக்கவிட்டால் ஈரானைக் கடுமையாகத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார். இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், “இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் திரும்பாது” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் நட்பு நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த பதிவு உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
