விசாகப்பட்டினம்:ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரன் எடுப்பது தொடர்பான பிரச்னையில் கிரிக்கெட் போட்டி அம்பயரின் சகோதரர் குத்தி கொல்லப்பட்டார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கடந்த 5ம் தேதி இரு அணிகள் இடையே உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது, ஒரு ரன் எடுத்தது தொடர்பாக அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அம்பயராக இருந்த சிரஞ்சீவி தலையிட்டு அந்த பிரச்னையை முடித்து வைத்தார்.
இதையடுத்து ரன் கொடுத்த அம்பயரை குற்றஞ்சாட்டி அன்று மாலை அவரது சகோதரர் அஜித்துடன் பாதிக்கப்பட்ட அணியை சேர்ந்த கிஷோர் என்பவர் மீண்டும் வாக்குவாதம் செய்தார். பேச்சு முற்றி மோதலாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த கிஷோர் அம்பயரின் சகோதரர் அஜித் நெஞ்சில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து கிஷோரை போலீசார் தேடிவருகின்றனர்.
