மதுரை: மதுரைக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை என்று மதுரை மத்தி தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான தியாகராஜன் வருத்தமாக பேசினார்.
தமிழகத்தில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு அனைத்துக் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை வேகப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான தியாகராஜன் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார். அவ்வாறு மதுரை மத்தி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் பேசிய கருத்து, பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
அவர் பேசியதாவது;
நான் உண்மையில் கூறவேண்டும் என்று சொன்னால், வரும்போது சொன்னேன்… 50 வயதில் வருகிறேன், 60 வயதில் ஓய்வு பெற்று போய்விடுவேன். இப்போது 10 வருஷம் ஆகிவிட்டது. நான் ரிட்டயர்டு ஆகி இருக்க வேண்டும்.
ஆனால் இரண்டு வகையில் நான் எதிர்பாராத விளைவு. ஒன்று… மாநில அளவிலோ, இந்திய அளவிலோ உலக அளவிலோ இந்தளவுக்கு பெயரும், அடையாளமும் கிடைக்கும் என்று நான் என்றைக்குமே நினைக்கவில்லை. என் கனவில் இல்லாத அளவுக்கு எனக்கு அடையாளம் வந்துவிட்டது… அது நல்லது.
கெடுதல் என்னவென்றால் எனது முக்கிய இலக்கு மதுரைக்கு நிறைய செய்யணும் என்ற இலக்கோடு தான் வந்தேன். அதை நானே ஏற்றுக்கொள்வேன், விரும்பின அளவுக்கு என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அது அரசியலில் இருக்கிறவர்கள் ரொம்ப வெளிப்படையாக எதுவும் பேச முடியாது.
இவ்வாறு தியாகராஜன் பேசினார்.
