மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க மனித சங்கிலி அமைக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு

டெஹ்ரான் : ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து ஈரானுக்கு அமெரிக்க அதிபர் வழங்கியுள்ள காலக்கெடு நெருங்கிய நிலையில், மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க மனித சங்கிலி அமைக்க தன் நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேற்காசியா நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, 39 நாட்களாக போர் நடத்தி வருகின்றன. தன் எல்லையை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியுள்ளது.போரை நிறுத்த மற்றும் ஜலசந்தியை திறக்க, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார். கெடு முடிந்தவுடன், ஈரானின் மின் உற்பத்தி மையங்கள், பாலங்களை தாக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த கெடு முடிய உள்ள நிலையில், ஈரானில் பதற்றம் நிலவி வருகிறது-. இதைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனித சங்கிலிகளை உருவாக்குமாறு ஈரான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஈரானிய இளைஞர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான உயர் கவுன்சில், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை புஷெர் அணுமின் நிலையம் மற்றும் பிற பிராந்திய மின் நிலையங்களை சூழ்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தவும், தாக்குதல்களை தடுப்பதற்காகவும் ஈரான் எடுத்துள்ள இந்த மனித கேடய முயற்சி பலனளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், கோடிக்கணக்கான தன்னார்வலர்கள் இருப்பதாகக் கூறினாலும், பல ஈரானியர்கள் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, இந்த மனித சங்கிலியில் எத்தனை பொதுமக்கள் உண்மையாகவே தங்களை போர்க்களத்தில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே.

உயிரை தியாகம் செய்ய தயார்!

ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான டிரம்பின் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், தன் எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டின் பாதுகாப்பிற்காக. 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ய தன்னார்வலர்களாக வந்துள்ளனர். நானும் என் உயிரை தியாகம் செய்ய தயாராக இருந்தேன், இருக்கிறேன், எப்போதும் இருப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மொத்த மக்கள் தொகை 9.3 கோடியாகும். கடந்த சில நாட்களாகவே ஈரான் அரசு குறுஞ்செய்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களை தன்னார்வலர்களாக இணைய வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், ஈரான் அதிபர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் குறித்து தெரிவித்திருப்பது, அரசின் கோரிக்கையை ஏற்று மக்கள் இணைந்துள்ளதையே காட்டுகிறது. தன்னார்வலர்களாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, 12 வயது சிறுவர்களும் இக்குழுவில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு ஒருபுறம் நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தினாலும், மறுபுறம் பொதுமக்களை போரில் ஈடுபடுத்துவது சர்வதேச அளவில் ‘போர் குற்றம்’ ஆகும்.

Source link