அரூர் : 'வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு, எதற்கு இத்தனை பேரை அழைத்து வந்தீர்கள்' என, திமுக – எம்பி மணி

அரூர் : ‘வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு, எதற்கு இத்தனை பேரை அழைத்து வந்தீர்கள்’ என, திமுக – எம்பி மணி கேட்டதால், விசி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் சண்முகம், நேற்று, அரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, தர்மபுரி கிழக்கு மாவட்ட, திமுக பொறுப்பாளரும், எம்பியுமான மணி மற்றும் கூட்டணியில் உள்ள, விசி – மார்க்சிஸ்ட் – கொமதேக – காங் – தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் மனுதாக்கலுக்கு ஊர்வலமாக வந்தனர். மனு தாக்கல் முடிந்தவுடன், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டனர்.

இதனிடையே, ‘மனுதாக்கல் நிகழ்ச்சிக்கு எதற்கு இவ்வளவு தொண்டர்களை அழைத்து வந்தீர்கள்’ என, விசி கட்சி நிர்வாகிகளிடம், திமுக – எம்பி மணி ஆவேசத்துடன் கேட்டதால், அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து, விசி நிர்வாகிகள் கூறியதாவது:

பிரசாரத்தில் கலந்து கொள்ளும், விசிக நிர்வாகிகளுக்கு, திமுகவினர் இதுவரை ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்கவில்லை. நேற்று நடந்த வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு, விசி தொண்டர்கள், 200 பேர் வந்தனர். நிர்வாகிகளுடன் தொண்டர்கள் வரத்தான் செய்வார்கள். ஆனால், உங்களை மட்டும்தான் வரச்சொன்னோம். ‘எதற்கு, இத்தனை பேரை அழைத்து வந்தீர்கள்’ என, திமுக – எம்பி மணி கோபத்துடன் கேட்டார். இதற்கு என்ன பதில் சொல்வது. விசி தொண்டர்கள் சாப்பிட்டதற்கு நாங்கள் தான் பணம் கொடுத்தோம். இப்பிரச்னை, எங்கள் கட்சித்தலைவர் திருமாவளவன் வரை சென்றுள்ளது. எம்பி மணி, மொரப்பூர், திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகநதி ஆகிய மூன்று பேரும் தான், தேர்தல் பணியை சீர்குலைக்கின்றனர். இன்று நடந்த பிரசாரத்தில், விசி கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தொடரும் மோதல்

ஏற்கனவே, கடந்த, 30ல், அரூர் கச்சேரிமேட்டில், ‘தர்மபுரி, திமுக – எம்பி அளித்த தவறான தகவலால்தான், விசிகவுக்கு அரூர் தொகுதி ஒதுக்கவில்லை, எனவே, எம்பி வந்தால்தான் தேர்தல் பணியை துவங்குவோம்’ எனக்கூறி, தங்களை சந்திக்க வந்த, அரூர் தொகுதி, திமுக வேட்பாளர் சண்முகத்தை, விசிகவினர் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Source link