சுப்மன் கில் களமிறங்க 'ரெடி' * சாய் சுதர்சன் நம்பிக்கை

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பங்கேற்க உள்ளார்.

கிரிக்கெட் லீக் தொடரில் இன்று டில்லியில் நடக்கும் போட்டியில் குஜராத், டில்லி அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், தசைப்பிடிப்பு காரணமாக, ராஜஸ்தான் அணிக்கு எதிராக பங்கேற்கவில்லை. இப்போட்டியில் குஜராத் 6 ரன்னில் தோற்றது.

இதனால் இன்றைய போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து குஜராத் அணி துவக்க வீரர் சாய் சுதர்சன் கூறியது: பொதுவாக ‘டாப்-3’ பேட்டர்களில் யாராவது ஒருவர், களத்தில் நிலைத்து நின்று விளையாடினால், அணிக்கு பெரிதும் கைகொடுக்கும். எங்களது ‘மிடில் ஆர்டர்’ வரிசை மீது நம்பிக்கை உள்ளது. இதே அணி தான் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டது. மீண்டும் இதுபோல அசத்த முடியும் என நம்புகிறோம்.

அதே நேரம் ‘டி-20’ கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் நல்ல முன்னேற்றம் அடைகிறது. இதில் இருந்து கற்றுக் கொள்வது மிக முக்கியம். சூழலுக்கு ஏற்பட என்னை தயார் செய்து கொண்டு, அணியின் வெற்றிக்கு கைகொடுக்க முயற்சிப்பேன்.

இதற்கு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளில் அதிக நேரம் ஈடுபடுகிறேன். இன்று டில்லிக்கு எதிரான போட்டியில் எங்களது கேப்டன் சுப்மன் கில் விளையாடுவது உறுதி. அவர் முழு உடற் தகுதியுடன் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link