டியான்ஜின்: ஆசிய உள்ளரங்கு தடகள ‘ஹெப்டத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் தங்கம் வென்றார்.
சீனாவின் டியான்ஜின் நகரில், ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான ‘ஹெப்டத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். இதில் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், போல் வால்ட், 1000 மீ., ஓட்டம் உள்ளிட்ட 7 போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில் 5993 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தேஜஸ்வின் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பூஜா வெள்ளி: பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் இந்தியாவின் பூஜா சிங் 18, பங்கேற்றார். அதிகபட்சமாக 1.87 மீ., தாண்டி 2வது இடம் பிடித்த பூஜா, புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன், 2004ல் இந்தியாவின் பாபி அலோசியஸ், 1.84 மீ., தாண்டியது உள்ளரங்கு தடகள உயரம் தாண்டுதலுக்கான தேசிய சாதனையாக இருந்தது.
ஆண்களுக்கான குண்டு எறிதல் பைனலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் டூர் பங்கேற்றார். அதிகபட்சமாக 20.05 மீ., எறிந்த இவர், வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்தியாவின் ஆன்சி சோஜன் பங்கேற்றார். அதிகபட்சமாக 6.21 மீ., தாண்டிய ஆன்சி ஜோசன், 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 5 பதக்கம் கிடைத்தது. ஏற்கனவே உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ஆதர்ஷ் ராம் வெண்கலம் வென்றிருந்தார்.
