நிலவின் மறுபக்கத்தில் மறைந்த வீரர்கள்; புதிய மைல்கல்லை எட்டிய 'ஆர்டெமிஸ் – 2'

நியூயார்க்: நிலவில் தரையிறங்காமல் அதை மிக நெருக்கமாக சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆர்டெமிஸ் 2 திட்டத்தை, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா செயல்படுத்தியுள்ளது. இதன்படி, நிலவுக்கு, 50 ஆண்டு களுக்குப் பின் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்காக, நான்கு வீரர்களை சுமந்துகடந்த 1ம் தேதி, விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து அதன் மேற்பரப்பை மிக நெருக்கமாக கடந்தது.

அப்போது மனித வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத அதிகபட்ச துாரத்தை நாசா வீரர்கள் எட்டினர். நிலவுக்கு மிக அருகில், அதாவது 6,545 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்ற அவர்கள், மனிதக் கண்களால் இதுவரை பார்க்காத வகையிலான புகைப்படங்களை எடுத்து அனுப்பினர்.

பூமியிலிருந்து, 4,06,778 கி.மீ., தொலைவை அடைந்த அவர்கள், 1970ம் ஆண்டு அப்பல்லோ 13 திட்டத்தின் 4,00,171 கி.மீ., என்ற சாதனை துாரத்தை முறியடித்தனர். இது மனித குலத்தின் விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாக அமைந்தது.

விண்கலம் நிலவுக்குப் பின்னால் சென்றபோது, பூமியுடனான அதன் தகவல் தொடர்பு, 42 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4:13 மணிக்கு சிக்னல் இழக்கப்பட்டு, அதிகாலை 4:55 மணிக்கு மீண்டும் பெறப்பட்டது. அந்த 40 நிமிடங்கள் பூமியில் இருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ‘திக்திக்’ நிமிடங்களாகவே இருந்தது.

நிலவைச் சுற்றி ஏழு மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வீரர்கள், இரண்டு புதிய பிரகாசமான பள்ளங்களை கண்டறிந்து பெயர் சூட்டினர்.

அத்துடன் சூரியனை நிலவு தற்காலிகமாக மறைக்கும் மொத்த சூரிய கிரகண காட்சியையும், நிலவுக்கு பின்னால் இருந்து சூரிய உதயத்தையும் கண்டதாக விவரித்தனர்.

Source link