புதுடில்லி: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், 91

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், இனி புதிதாக பெயர் சேர்ப்பு இருக்காது எனவும் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்., 23 மற்றும் ஏப்., 29 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவு மே 4ல் வெளியாகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, அம்மாநிலம் முழுதும், கடந்த ஆண்டு நவம்பரில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் திரிணமுல் காங்., கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இறுதி முடிவு

பலத்த எதிர்ப்புக்கு இடையே, கடந்த பிப்., 28ல் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதில், 63.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 7.66 கோடியில் இருந்து, 7.04 கோடியாக குறைந்தது. அதாவது, மொத்த வாக்காளர்களில், 8.3 சதவீத அளவுக்கு பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும், தர்க்க ரீதியான முரண்பாடுகள் காரணமாக, 60.06 லட்சம் பேர் பெயர்கள் இறுதி பட்டியலில் சேர்க்காமல் நிறுத்தப்பட்டன.

இந்தச் சூழலில், பெயர்கள் நீக்கப்பட்டதற்கும், தர்க்க ரீதியான முரண்பாடுகள் பட்டியலில் சேர்த்ததற்கும் ஆட்சேபனை தெரிவித்து, வாக்காளர்கள் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தீர்ப்பாய நீதிபதிகள் விசாரித்து இறுதி முடிவு எடுத்தனர். மேலும், இதற்கான துணை வாக்காளர் பட்டியலையும் அவர்கள் வெளியிட்டு வந்தனர்.

அந்த வகையில், தர்க்க ரீதியான முரண்பாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட 60.06 லட்சம் வாக்காளர்களில், 27.16 லட்சம் வாக்காளர்கள் பெயர்களை தீர்ப்பாய நீதிபதிகள் நீக்கியுள்ளனர். 32.68 லட்சம் வாக்காளர்களி ன் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டன.

13ல் விசாரணை

இதன் மூலம், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், 90.83 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக, தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட வாரியான தரவுகள் பொதுதளத்தில் வைக்கப்பட்டதால், திருத்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்தன. இதில், தர்க்க ரீதியான முரண்பாடுகள் கொண்ட 60.06 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 59.84 லட்சம் வாக்காளர்களின் விபரங்கள் ஏற்கனவே பொதுவெளியில் வெளியிடப்பட்டுவிட்டன.

தீர்வு காணப்பட்ட 22,163 வாக்காளர்களின் விபரங்கள் மின்னணு கையொப்பத்திற்காக காத்திருப்பில் உள்ளன. அந்த பணிகள் முடிந்ததும் பெயர் நீக்கம் மற்றும் சேர்ப்பில் சிறிய மாறுதல்கள் இருக்கும். முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததால், தேர்தல் விதிகளின்படி வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டு விட்டது. இனி எந்த திருத்தமும் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது தகுதி வாய்ந்த அதிகாரிகளின் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் இருந்தால் மட்டுமே, மாற்றங்கள் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Source link