பொங்கலுார்: பொங்கலுார் பகுதியில், பிரசாரத்துக்கு வரும் தி.மு.க.,வேட்பாளரை வரவேற்க, தலைக்கு, 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ் போட்டியிடுகிறார். இவர், தற்போது பல்லடம் வட்டாரம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று பல்லடம் தொகுதி, கண்டியன்கோவில் கிராமத்தில், தி.மு.க., நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று, வரவேற்புக்கு வந்தால் 200 ரூபாய்; ஆட்டோவில் பிரச்சாரத்துக்கு வந்தால் 500 ரூபாய் தருவதாக கூறி பொதுமக்களை அழைத்து வந்தனர். இதனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவரை வரவேற்க திரளான மக்கள் நேற்று காத்திருந்தனர்.
வேட்பாளர் செல்வராஜ் வேனை விட்டு இறங்கி மக்களோடு நின்று குறைகளை கேட்டார். பணம் பட்டுவாடா செய்ததால், செல்வராஜ் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது.
கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு குக்கிராமத்திலும் அவரை வரவேற்க காத்திருந்த பொதுமக்களை கணக்கெடுத்தனர். அவர் கிளம்பியவுடன் வரிசையில் நிற்க வைத்து தலைக்கு, 200 ரூபாய் பட்டுவாடா செய்தனர். ‘இங்கு பட்டுவாடா செய்யக்கூடாது’ என்று போலீசார் நிர்வாகிகளை விரட்டினர். இருப்பினும், தி.மு.க.,வினர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்தனர்.
‘தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் கண்கொத்தி பாம்பாக கண்காணிப்பதெல்லாம் ஆடு, மாடு விற்று பணத்தை எடுத்துச் செல்லும் அப்பாவி மக்களை தான். கட்சியினர் மூட்டை மூட்டையாக பணத்தைக் கொண்டு வந்து பட்டுவாடா செய்கின்றனர். இதை கண்டுகொள்ளாமல், பறக்கும் படை குறட்டை விட்டு துாங்குகிறதா’ என, பலர் கேள்வி கேட்கின்றனர்.
