சென்னை: ‘சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, உடல் பருமன் பாதிப்பு, மதுரை, திருச்சி, சென்னையில் அதிகம் உள்ளது’ என, அப்பல்லோ மருத்துவ குழுமம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவ குழுமம் சார்பில், ஆரோக்கியம் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, நாடு முழுதும், 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் மூன்றில் இரண்டு இளைஞர்களுக்கு, தொற்றா நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பது தெரிய வந்தது. மேலும், ஐந்து பேரில் ஒருவர் சர்க்கரை நோய்க்கு, முந்தைய நிலையில் உள்ளனர்.
அலுவலக வேலைக்கு செல்வோரில், 10 பேரில், எட்டு பேர் உடல் பருமனால் பாதிக்கப் பட்டுள்ளனர். அத்துடன், பாதி பேருக்கு மேல், சர்க்கரை நோய் அல்லது அதன் ஆரம்ப நிலை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களிடம் மார்பக புற்றுநோய், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் காணப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை, உடல் பருமன் ஆகிய பாதிப்புகளில், தேசிய அளவில், மதுரை, திருச்சி நகரங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சென்னை ஐந்தாம் இடத்தில் உள்ளது. பெங்களூரு, மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இது குறித்து, அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், ”ஆரோக்கியம் என்பது பயத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்வினை அல்ல. ”முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்பாடு. நோய் அபாயங்களை துல்லியமாக கண்டறிந்து, தடுப்பு முறையை தீவிரப்படுத்த ஆய்வுகள் உதவும்,” என்றார்.
அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி ஆகியோர் கூறுகையில், ‘சரியான நேரத்தில் செய்யப்படும் பரிசோதனை வாயிலாக, இதயம், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்த முடியும்,’ என்றனர்.
![]() |

