கொழும்பு: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய இலங்கை அணி 20 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இலங்கை அணிக்கு கமிலா மிஷாரா (14), பதும் நிசங்கா (24) சுமாரான துவக்கம் தந்தனர். கமிந்து மெண்டிஸ் (44) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் தசுன் ஷனகா ‘டக்-அவுட்’ ஆனார். மார்க் அடேர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்தார். இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. குசால் (56), வணிந்து ஹசரங்கா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் (6) ஏமாற்றினார். ராஸ் அடேர் (34), ஹாரி டெக்டர் (40), லார்கன் டக்கர் (21) ஆறுதல் தந்தனர். கர்டிஸ் கேம்பர் (13), பென் காலிட்ஸ் (4), கரேத் டெலானி (0), மார்க் அடேர் (10) நிலைக்கவில்லை. அயர்லாந்து அணி 19.5 ஓவரில் 143 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’டாகி தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் மகேஷ் தீக் ஷனா, வணிந்து ஹசரங்கா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
