திருப்போரூர் வி.சி.க., வேட்பாளர் எஸ்.சி.,யா, வன்னியரா?

திருப்போரூர் தொகுதியின் வி.சி.க., வேட்பாளர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதில் கூட்டணி கட்சியினர் குழம்பி போய் உள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில், வி.சி.க.,வுக்கு ஆறு தனித் தொகுதிகளும், திருப்போரூர், பண்ருட்டி ஆகிய இரு பொதுத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

வன்னியர் சமூகத்தினர் அடர்த்தியாக இருக்கும் திருப்போரூர் தொகுதி, கடந்த முறையும் வி.சி.க.,வுக்கு தான் கிடைத்தது. எனவே தான், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜிக்கு, திருமாவளவன் வாய்ப்பு கொடுத்தார். அதனால்தான், பா.ம.க.,வை தோற்கடிக்க முடிந்தது. இம்முறை, பாலாஜிக்கு சீட் கொடுக்கவில்லை.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வி.சி.க., நிர்வாகிக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்டியலினத்தை சேர்ந்த கிறிஸ்துவரான பன்னீர்தாசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த முறை, வி.சி.க., சார்பில் வன்னியர் வேட்பாளர் நின்றதால், இந்த முறையும் வி.சி.க., நிர்வாகிகளும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், பன்னீர்தாசை வன்னியர் என்றே நினைக்கின்றனர்.

வன்னியர் ஓட்டுகள் இருக்கும் பகுதியில், பன்னீர்தாசை வன்னியர் என்றும், பட்டியலின மக்கள் இருக்கும் பகுதியில், ‘நம்ம ஆளுதாங்க’ என்றும் ஓட்டு கேட்கப்படுகிறது.

ஆனால், உண்மையில் வேட்பாளர் என்ன ஜாதி என்பது தெரியாமல், தேர்தல் பிரசாரத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Source link