சூரஜ்குண்டில் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: டி.ஜி.பி.,

பரிதாபாத்: ”சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருள் கண்காட்சி வளாகத்தில் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்து, உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்,” என, ஹரியானா டி.ஜி.பி., அஜய் சிங்கால் கூறினார்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே சூரஜ்குண்டில், 39வது சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, கலை நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்படுகின்றன. பொழுது போக்கு சாதனங்கள், விதவிதமான உணவுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று முன் தினம் இரவு, ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்தது. அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜகதீஷ் பிரசாத், 58, ராட்டினத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.

காயம் அடைந்த, 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் கண்காட்சி திடலின் ஒரு நுழைவாயில் இடிந்து, ஒரு குழந்தை உட்பட இருவர் காயம் அடைந்த அடுத்த சில மணி நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ராட்டினம் அறுந்து விழுந்தவுடன் அதில் இருந்த மக்களை காப்பற்ற சென்று உயிரிழந்த ஜகதீஷ் பிரசாத், 2019- – 2020ம் ஆண்டு ஹரியானா கவர்னரால் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டவர். கடந்த, 1989-ல் ஹரியானா போலீசில் சேர்ந்த பிரசாத், 36 ஆண்டுகள் சேவையை முடித்து மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ராட்டின உரிமையாளர் ஹிமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தைச் சேர்ந்த, முஹமது ஷகிர் மற்றும் ராட்டின ஊழியர்கள் மீது சூரஜ்குண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்பிரிவு துணைக் கமிஷனர் முகேஷ் குமார் தலைமையில், உதவி கமிஷனர் வருண் தஹியா மற்றும் சூரஜ்குண்ட் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் ஆகியோர், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா டி.ஜி.பி., அஜய் சிங்கால் கூறுகையில், ”மக்களைக் காப்பற்ற தன் உயிரை பணயம் வைத்த இன்ஸ்பெக்டர் ஜகதீப் பிரசாத் தியாகியாக கருதப்படுவார். பிரசாத் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்,” என்றார்.

உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டம் தெங்ரா கிராமத்தைச் சேர்ந்த ஜகதீப் பிரசாத் மனைவி சுதா, மகள்கள் நிதி, தீப்தி, மகன் கவுரவ் ஆகியோருடன் சோனிபட் போலீஸ் குடியிருப்பில் வசித்தார். வாரிசுகளில் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

பிரசாத்தின் சகோதரர்களில் ஒருவரான பிரதீப் பள்ளி ஆசிரியர். அவர் தன் தந்தை சூரஜ்மல் மற்றும் தாய் சாந்தி தேவியுடன் கிராமத்தில் வசிக்கிறார். மற்றொரு சகோதரர் சதீஷ் சந்திரா பல்லப்கர் ரசாயணத் தொழிற்சாலை ஊழியர். இளைய சகோதரர் சந்திரபான் சிங் பரிதாபாத் மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

Source link