இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றி பெறும்.. போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

நேற்று இரவு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்கும் நிபந்தனையுடன் ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடுவை 2 வாரங்கள் நீட்டிப்பதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, இரண்டு வாரங்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவுடனான 2 வார போர் நிறுத்தத்திற்கும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரான் 10 நிபந்தனைகளுடன் சம்மதித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மிகுந்த பணிவுடன் நான் அறிவிப்பது என்னவென்றால், ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்காவும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஈரான், லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த விவேகமான நடவடிக்கையை நான் மனதார வரவேற்பதோடு, இரு நாடுகளின் தலைமைகளுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து ஒரு உறுதியான உடன்படிக்கையை எட்டுவதற்காக, அவர்களின் தூதுக்குழுக்களை 2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்திற்கு வருமாறு அழைக்கிறேன்.

இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க விவேகத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். ‘இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்’ நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், மேலும் வரும் நாட்களில் இன்னும் பல நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்!” என்று தெரிவித்துள்ளார்.

Source link