பாகிஸ்தான் மதியஸ்தத்தை ஏற்று அமெரிக்கா-ஈரான் 2 வார போர்நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ளது. ஏப்ரல் 10 அன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் அமெரிக்கா மற்றும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வந்தன.
இஸ்ரேல்-அமெரிக்கவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. இதன் மூலம், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மூடியது.
இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து, எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் அமெரிக்கா ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்து, ஈரானும் அந்த முடிவை ஏற்றுக்கொண்ட சில மணி நேரங்களிலேயே கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்தன.
இன்று (புதன்கிழமை) பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 109.77 டாலரிலிருந்து 95.068 டாலராக சரிந்தது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பே எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
போர் நிறுத்தம் அமலில் உள்ள 2 வார காலத்திற்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவ மேற்பார்வையில் கப்பல் போக்குவரத்து நடக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
