TN Assembly Election | விஜய்க்கு கூடுவது தானாக சேர்ந்த கூட்டம் – நாஞ்சில் சம்பத்

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டசபை தொகுதி த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

இந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். எங்கள் கட்சியின் தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வருகிறது.

தி.மு.க.-அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கூட்டங்களுக்கு பணம், பிரியாணி, குவாட்டர் ஆகியவை கொடுத்து தான் கூட்டம் சேர்த்து வருகின்றனர். ஆனால் நாங்கள் பணம், பிரியாணி, குவாட்டர் கொடுப்பதில்லை.

விஜய்க்கு கூடுவது தானாக சேர்ந்த கூட்டம். மேலும் மேக்-அப் போடாமல் உணர்வுபூர்வமாக மக்களை சந்திக்கும் ஒரே தலைவர் விஜய்தான். ஆனால் மாற்றுக் கட்சியினர் தலையில் டை அடிக்காமல், மேக்-அப் போடாமல் வெளியே வருவதில்லை. நடிகனை போல வலம்வந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க, பிரதமர் மோடி ஷூட்டிங் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிடுகிறார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்து உள்ளது. பெண்கள் தனியாக நடமாட இயலவில்லை. பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

மாநில அளவில் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. குடும்ப அரசியல் ஒரு புறம், மதவாத அரசியல் ஒருபுறம் என்று பொதுமக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

தமிழகத்தின் உச்சத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டாக போட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் 23-ந்தேதி காலை 10 மணிக்குள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link