நமது சிறப்பு நிருபர் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் மீது முதல்வர்

நமது சிறப்பு நிருபர்

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் எந்த புகாரும் கூறாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா, தேர்தல் ஆணையம் மீது தினம் ஒரு புகாரை அடுக்கி வருகிறார்.

பொதுவாக ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் போதெல்லாம் தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக கூறப்படுவது வழக்கம். கடந்த லோக்சபா தேர்தலின் போது கூட தேர்தல் ஆணையம் மீது சில புகார்களை திமுக கூறியது. இம்மோதல் போக்கை அதிகரிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலையும் தமிழகத்தில் சமீபத்தில் திருத்தம் செய்தது தேர்தல் ஆணையம்.

இதற்கு எதிராகக் கூட சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடர்ந்தது திமுக. ‛‛இப்போதே தேர்தல் ஆணையத்துடன் திமுக மோதத் துவங்கி விட்டது. தேர்தல் நேரத்தில் இன்னும் என்னென்ன மோதல்களை திமுக நடத்தப் போகிறதோ” என்று அப்போதே பலரும் பேசத் தொடங்கினர். ஆனால், நினைத்ததற்கு மாறாக இப்போது எதுவும் நடக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனைக்கும் திமுக ஆதரவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கிய பதவிகளில் இருந்து ஆணையத்தால் மாற்றப்படவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் திரிணமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வரின் ஆதரவு அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். மம்தாவின் கடும் எதிர்ப்பை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

இதற்கு ஒரு படி மேலே போய், மேற்கு வங்க அதிகாரிகள் பலர் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்திற்கு அனுப்பப்பட்டனர். மம்தாவே இதை வெளிப்படையாக பேசிவிட்டார். ‛‛தமிழகத்தில் திமுக – பாஜ – காங்கிரஸ் இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது.

அதனால் தான் மேற்கு வங்க அதிகாரிகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்” என்று குற்றம் சுமத்தி உள்ளார். இவர் இப்படி சொன்னதற்கு என்ன அர்த்தம் என்றால், ‛‛தேர்தல் ஆணையம் தமிழகத்தில் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது” என்பது தான். மத்தியில் ஆளும் பாஜ கூட்டணி அரசையும் பிரதமர் மோடியையும் ஸ்டாலின் கடுமையாக தாக்கிப் பேசுவதும், மோடியும் அமித்ஷாவும் திமுகவை கடுமையாக விமர்சிப்பதும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டு இருக்கின்றன.

பாஜ உடன் திமுக பகிரங்கமாக மோதிக்கொண்டு இருக்கும்போது, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் எப்படி சாதகமாக நடந்துகொள்ளும் என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம், ‛‛தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தனது பணியாக சரியாக செய்துகொண்டு இருக்கிறது. அதனால் தான் திமுக எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை” என்று மற்றொரு தரப்பினர் சொல்கின்றனர். எப்படியோ, எல்லோரும் தங்கள் பணியை நேர்மையாக செய்தால் சரி தான்” என்று பொதுமக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.

Source link