பெங்களூரு: ‘பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது’ என மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் மலர்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அவகேடோ தற்போது இந்தியாவில் விளைவிக்க துவங்கப்பட்டுள்ளது.
இதே போன்று, டிராகன் புரூட் உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர்களைக் கண்டறிந்து, அவற்றை பயிரிட ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தக்காளி, சீதாப்பழம் போன்ற விளைபொருட்களின் வாழ்நாளை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்க ஆராய்ச்சி மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் நஷ்டமடைவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
