லேட்டஸ்ட் அப்டேட் ‘கூகுள் பே’-யில் இப்போது ‘People’ பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, ‘Pocket Money’ என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் இந்த ஐகானைத் தொட்டால், வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காலியாகி விடும் என்று பேசுகிறார். இது ஒரு மோசடி வலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அது உண்மையா… என்பதை நாம் ‘Fact Check’ செய்து பார்த்தோம்.
‘பாக்கெட் மணி‘ என்ற கூகுள் பேயின் புதிய அறிமுகம், பெயருக்கு ஏற்றாற்போல, அது வழக்கமான பாக்கெட் மணி கான்செப்ட் தான்.
இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.
ஸ்கூல், காலேஜிற்கு செல்லும் போது, அம்மா, அப்பா கையில் கொஞ்சம் செலவுக்குக் காசு கொடுத்துவிடுவார்கள். அது அந்தக் காலம்.
இப்போது இந்த டிஜிட்டல் காலத்தில், கூகுள் பேயில் காட்டும் ‘பாக்கெட் மணி’யில் யாருக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு காசு தரலாம்… தர வேண்டும் என்று இணைத்துவிட்டால், அவர்கள் அந்த அளவிற்கு செலவு செய்துகொள்ளலாம்.
உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ ரூ.5,000-த்தை பாக்கெட் மணியாக செட் செய்துவிட்டால், அவர்கள் இந்த ஆப்ஷனில் செலவு செய்யும் ரூ.5,000 உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செல்லும்.
பாக்கெட் மணி ‘இவ்வளவு’ என்று செட் செய்ய முடியாது என்பவர்கள், ‘Approve Every Payment‘ என்கிற ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.
அதாவது இந்த ஆப்ஷனில் அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செலவு செய்யும் ஒவ்வொரு பேமென்டுகளுக்கும் உங்களது ஒப்புதல் தேவை.

பாக்கெட் மணி அளவை செட் செய்கிறீர்களோ, அப்ரூவ் எவ்ரி பேமென்ட் கொடுக்கிறீர்களோ – எதுவாக இருந்தாலும் முதலில் உங்களிடம் இருந்து நீங்கள் யாருக்கு பாக்கெட் மணி செட் செய்கிறீர்களோ, அவர்களுக்கு ‘இன்வைட்’ செல்லும்.
அவர்கள் அதற்கு ‘accept‘ கொடுத்ததும் தான், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் செல்ல ஆரம்பிக்கும்.
இந்த ஆப்ஷனுக்கு ஒப்புதல் கொடுப்பவர்கள், அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியாதா என்று கேட்டால், ‘முடியும் தான்’.
உங்கள் மகள் அல்லது மகன் ஒவ்வொரு பேமென்ட் செய்யும் போதும், ‘Choose account to pay with‘ என்கிற ஆப்ஷன் காட்டும்.
அதில் அவர்கள் செலெக்ட் செய்துக்கொள்ளலாம்.
இந்தப் பாக்கெட் மணி ஆப்ஷனில் சில நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது. அவை…
> ஒருவர் அதிகபட்சம் ஐந்து பேருக்கு பாக்கெட் மணி செட் செய்ய முடியும்.
> பாக்கெட் மணி யாருக்கு செட் செய்கிறோமோ, அவர்களின் போன் நம்பர் உங்கள் போனில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
> அவர்கள் கூகுள் பே ஆப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.
> தொகை செட் செய்யப்பட்டதும், அதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பேமென்ட்டுகளையும் செட் செய்தவர்கள் டிராக் செய்ய முடியும்.

> பாக்கெட் மணியில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு பேமென்ட்டுகளும், உங்களது கணக்கில் இருந்து தான் கழிக்கப்படும்.
> மாதா மாதம் தொகையின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.
இதைத் தவிர, மோசடியான ஒரு விஷயத்தை கூகுள் பே என்கிற அப்-டு-டேட் தொழில்நுட்பம், அவர்களது ஆப்பில் அதுவும் முதல் வரிசையில் வைத்திருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.
